MALENA (18+) – சினிமா விமர்சனம்



பொறாமை – தன் சகமனிதன் தன்னைவிட எதாவது ஒருவகையில் உயர்ந்தவராய் இருந்தால் நமக்குள் அரிப்பெடுத்து அலையும் உணர்ச்சி. ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு அதிகம். அதேநேரம் நம்மைவிட எதாவது ஒருவகையில் உயர்ந்தவராய் இருந்தால் ஆண்களின் எண்ணம் அதை அடைந்தே ஆகவேண்டும் என்ற கோரவெறி. அடைய முடியாவிட்டால் உயர்ந்தவரை தாழ்மைப்படுத்த வேண்டும் என்ற சிறுமைத்தனம்.  இது எல்லா மனிதர்களுக்குள்ளும் புதைந்துகொண்டிருக்கும் மிருகத்தனத்தின் எச்சம். அது வெளிப்பட்டால்? அதனால் பாதிக்கப்பட்டால்? அப்படி பாதிக்கப்பட்டவள் தான் மலெனா.

அதற்குமுன் உலகசினிமாக்களில் ஈரானியத் திரைப்படங்களைத் தவிர வேறு எந்த மொழிப்படங்களைப் பார்ப்பதாய் இருந்தாலும் தனியாகவே பாருங்கள். அற்புதமான படம் என்பதால் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கலாம் (!) என்று நினைத்தால் ஜிகிர்தண்டாவில் வரும் வேட்டையாடு விளையாடு கிளைமேக்ஸ் தான் உங்கள் வீட்டிலும் நடக்கும். அதிலும் இத்தாலிய, ப்ரெஞ்ச் திரைப்படங்கள் என்றால் ஹெட்போனை மாட்டிக்கொண்டே பாருங்கள். எந்த இடத்தில் இருந்து காம மொனகல்கள் வரும் என்று எதிர்பார்க்கவே முடியாது. பேசிக்கொண்டே இருப்பார்கள்; பட்டென்று உடையைக் கழட்டிவிட்டு ஆரம்பித்துவிடுவார்கள். அதிலும் இத்தாலிய சினிமாக்களில் பெரும்பான்மையான கலைப்படைப்புகள் (லா பெட்டா ஈ பெல்லா, த லீபேர்ட், இல் ஜியார்டினோ டை ஃபின்சி கான்டினி மாதிரியான கமர்சியல் படங்கள் இல்லை) செக்ஸ் என்ற வட்டத்தைச் சுற்றியே நிகழும். ஈரானியர்களுக்கு பேமஸ் குழந்தைகள் என்றால் இத்தாலியர்களின் பேமஸ் பெண்கள். பெண்களின் அழகை அவர்களிடம் சிக்கும் கேமரா வெளிப்படுத்தும் அளவிற்கு வேறு யாராலும் வெளிப்படுத்திவிட முடியாது. இத்தாலியின் டாப் 10 படைப்புகளை எடுத்துப் பார்த்தால் அதில் பாதிக்கும் மேல் செக்சை முக்கியமானதொரு புள்ளியாக வைத்தே நகரும்.
இப்போது மலேனாவை பார்க்கும்முன் இவ்வளவு விசயங்களைக் கூறுவதற்கு காரணம், அழகுக்கும் அருவெறுப்புக்கும் இடையே இருக்கும் நூலிழைக் கோட்டில் இத்திரைப்படம் பயணிக்கும். அருவெறுப்பு என்று கூறுவது பதின்ம வயது சிறுவனின் காமத்தினூடே இத்திரைப்படம் பயணிக்கும். சரியானபடி புரிந்துகொள்ளாமல் இது ஒரு பிட்டு படம் எண்ணும்படியாகவும் நேர்ந்துவிடலாம். அதனால் பார்க்கும்முன் சில விசயங்களை உணர்ந்துகொள்ள வேண்டும். படம் தீவிர அடல்ட்ரீ கன்டென்டை உடையது. உலகமெங்கும் பிட்டு படங்களுக்கு கூட 18 வயது ஆகாத நடிகர்களை நடிக்கவைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ப்ரேசர்ஸ், பார்ன்ஹப், நாட்டி அமெரிக்கா  முதலான பிட்டுப்பட தளங்களில் சைல்ட் செக்ஸ் வீடியோக்கள் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது 14 வயது சிறுவனின் காதல் கலந்த காமப்போராட்டம் திரைப்படத்தில் இடம்பெறுகிறது என்பதால் ஒரு சிலருக்கு தவறான புரிதலுக்கு வித்திட வாய்ப்பு உண்டு (படம் வெளியான நேரத்தில் இது பெரும் பிரச்சனையாக கிளம்பியது என்பதும் குறிப்பிடத்தக்கது). அதனால் இத்திரைப்படத்தின் கருவை விளக்கிக்கொள்ள இத்தாலியத் திரைப்படங்களை இதற்குமுன் பார்க்கவிட்டாலும் சரி; குறைந்தபட்சம் ஸ்டான்லி குப்ரிக்கின் EYES WIDE SHUT, A CLOACKWORK ORANGE, THE SHINING போன்ற திரைப்படங்களையாவது பார்த்திருக்க வேண்டும்.

1940-களில் இத்தாலியின் சிசிலி பகுதியில் வந்திறங்குகிறாள் மலேனா. கணவன் இத்தாலிக்காக போரிடும் மேஜர். இரண்டாம் உலக யுத்தத்தில் கலந்துகொள்ள சென்றிருக்கிறான். அவளின் தந்தை ஒரு காது கேட்காத பள்ளி ஆசிரியர். மலேனா – பெயருக்கேற்றார்போல் பேரழகி. அழகு என்பதன் முழு அடையாளமாய் விளங்குகிறாள். இது அந்நகரில் வசிக்கும் பெண்களுக்கு பொறாமையையும் ஆண்களுக்கு அவளை அடையவேண்டும் என்ற வெறியையும் தூண்டிவிடுகிறது. அதேநேரத்தில் ரொனட்டோ எனும் 14 வயது நடுத்தர குடும்பத்து சிறுவன் அவளைப் பார்க்கின்றான். பார்த்ததும் காதல். அவளை மனமார விரும்புகிறான். அவளை எண்ணியே தினமும் இரவு தூங்காமல் காமக்கனவுகளில் கழிகிறது. மலேனாவைப் பற்றிய வதந்திகள் கூடிய சீக்கிரம் உலாவர ஆரம்பிக்கிறது. அவளுக்கு கள்ளக்காதலன் இருக்கின்றான் என்று ஊரெல்லாம் வதந்திகளைக் கிளப்புகிறார்கள். ரெனோட்டாவால் தாங்க முடியவில்லை; அவளை பின்தொடருகிறான். ஆனால் அவள் தினமும் சந்திப்பது அவளின் தந்தையை. இப்படியாக இருக்க, அவளின் கணவன் போரில் இறந்துவிட்டான் என்ற செய்தி தெரியவருகிறது. இதுவரை அமைதிகாத்தவர்கள் இஷ்டத்திற்கு வதந்திகளைக் கிளப்ப ஆரம்பிக்கிறார்கள். ஆண்துணை என்று எங்கோ இருந்த ஒருவனும் இறந்துவிட்டதால் அவள் வீட்டை பிற ஆண்களும் நோட்டமிடுகிறார்கள். ஒவ்வொருத்தனாய் வந்து உதவுவதாக கூறிக் கூறி அவளை நெருங்க முயற்சிக்கிறார்கள். இப்படியாக இருக்க, அவளின்மேல் கள்ளக்காதல் கேஸ் பதிவு செய்யப்பட்டு கோர்ட்டுக்கு அழைத்துவரப்படுகிறாள்.  கோர்ட்டில் ஒரு வக்கில் அவளுக்கு ஆதரவாய் பணம் வாங்காமல் வாதாடி விடுதலையாக்குகிறான். பணத்திற்கு பதில் அவளைக் கேட்க, அவளோ மறுக்க, அவளை வன்புணர்ச்சிக்குள்ளாக்குகிறான். அதன்பின் அவளை மணந்துகொள்வதாக அவன் கூற, அவனைப் பிடிக்காவிட்டாலும் அவளும் வேறுவழியின்றி அவனை நம்புகிறாள்.

வக்கிலின் தாயார் திருமணத்திற்கு சம்மதிக்காததால் அவளுடைய உறவையும் முறித்துக்கொள்கிறான் வக்கில். இன்னொருபுறம் தந்தையும் இறந்துவிட முழுக்க அநாதையாகிறாள் மலேனா.  வறுமையும் சேர்ந்துவிடுகிறது. ரொட்டி கொடுப்பவன்கூட அவளை மேய நினைக்கிறான். பசிக்காக வேறுவழியில்லாமல் அவனுடன் படுக்கிறாள். ஒருகட்டத்தில் சிசிலி நகரை ஜெர்மானியர்கள் கைப்பற்றுகிறார்கள். இதன்பின் வேறுவழி தெரியாமல் அவள் விபச்சாரி ஆகிறாள். ஏற்கனவே வயித்தெரிச்சலில் இருக்கும் கூட்டம் வயித்தெரிச்சலுக்கு ஏற்றமாதிரியான விசயம் கிடைத்ததும் ஊரிலேயே மட்டமானவளாக அவளை நினைக்கின்றனர். சிலநாட்களுக்குப்பிறகு ஜெர்மானியர்கள் போரில் தோற்க, அமெரிக்கப்படை நாட்டினூடே நுழைகிறது. வெற்றிக்களிப்பில் நகரே ஆராவரமடைகிறது. அந்நேரத்தில் ஜெர்மானியர்களின் கைக்கூலி இவள் என்று கூறி அதுவரை ஆள்மனதில் பொதிந்து வைத்திருந்த அத்தனை வன்மத்தையும் அந்நகர பெண்கள் மலேனாவின் மீது பிரயோகப்படுத்துகிறார்கள். அவளை அடித்து, உடையைக் கிழித்து, மொட்டைஅடித்து ஊரைவிட்டே துரத்துகிறார்கள். அவளும் ரயிலில் ஏறி கிளம்பிச்செல்கிறாள். அவளின் அழகுக்காக  என்னவேனாலும் கொடுப்பதாய் கூறிய அத்தனை ஆண்களும் அவளை இழிபிறவியாய் பாவித்து, நமக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதைபோல் ஒதுங்கிக்கொள்கிறார்கள். இத்தனையையும் நாம் பார்ப்பது ரெனோட்டாவின் வழியே. அவனாக நாம் மலேனாவைப் பார்க்கிறோம். அவளை அடித்துத்தொரத்திய சிலநாட்களில் இறந்ததாக கூறப்படும் மலேனாவின் கணவன் ஊருக்குள் வருகிறான்.  அவன் யார் யாரிடமோ அவளைப் பற்றி விசாரிக்கிறான். அவனைக் கண்டாலே உச்சா போகுபவர்கள் கூட, போரில் கையிழந்த அவனைப் பார்த்து அந்த வேசியைப் பற்றி யாரிடம் கேட்கிறாய் எனக்கூறி அவமானப்படுத்தி தொரத்துகிறார்கள். இதன்பின் என்ன ஆனாது என்பது கிளைமேக்ஸ்.

இந்த மையக்கதை ஒருபுறம்; அடுத்தது இதன் மேலோட்டமான கதை – அதாவது ரெனோட்டாவின் கதை. டீனேஜ் ஆரம்பத்தில் ஒவ்வொருவருக்கும் பிறக்கும் காமம் கலந்த காதல். மலேனாவைப் பார்த்த நொடியிலிருந்து. அவளின் வாழ்க்கையை எப்படியாவது மீட்டெடுத்து அவளுக்கு நல்லவாழ்க்கையை அவன் அமைத்துத்தர ஆசைபட்டான். அவளை அவ்வூரிலிருக்கும் ஆண்களிடமிருந்து எப்படியாவது காப்பாற்றிவிட ஆசைப்பட்டான். தான் பார்த்த நாடகங்களில் வரும் காட்சிகளைப்போல் பறந்துசென்று அவளை காப்பாற்றவேண்டும் இந்த சதிகாரர்களிடமிருந்து என தினமும் எண்ணினான். அவனுக்குத் தெரிந்தது எல்லாம் மலேனா. அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் மனதினுள் படம்பிடித்தான். அவளை அடைய நினைத்தான். ஆனால் அவளை வற்புறுத்தி அடையும் வழியைக் காட்டிலும் தன் ஹீரோயிசத்தால் அவளைக் காதலில் வீழ்த்தவேண்டும் என்று எண்ணினான். அவளைப் பற்றி யாராவது தவறாக பேசினால் கோபம் பொத்துக்கொண்டு வர ஆரம்பித்தது அவனுக்கு. இத்தனைக்கும் ஒருமுறை கூட அவன் மலேனாவிடம் பேசியது கூட இல்லை. அவளுக்கு தெரியாமல் அவள் வீட்டில் நடப்பதை ஒளிந்துகொண்டு கவனித்தான். அவளைப் பற்றிய உண்மை அறிந்த மூன்றாவது ஆள். சூழ்நிலையையும் நிலைகெட்ட மாந்தாராலும் அவள் அடையும் கஷ்டங்களை அவளுக்கு தெரியாமலே அவளுடன் இருந்து புரிந்துகொண்டு வந்தவன். ஒருகட்டத்தில் அவளது கணவனைப் பார்த்ததும் அவளுக்கான வாழ்க்கையை அவளிடம் கொடுத்துவிட ஆசைப்பட்டான். ஒருகாதலனாய் தான் காதலித்த பெண்ணிற்கு நல்ல வாழ்க்கையை அமைத்தும் கொடுத்தான்.

THE GOOD THE BAD THE UGLY உள்ளிட்ட பல படங்களில் இணைக்கதாசிரியராக பணியாற்றிய லுசியானா வின்சென்சோனி எழுதிய சிறுகதையைப் படித்து அந்த பாதிப்பில் இருந்த இயக்குநர் ஜ்யோசபே தர்னேத்தோர் ஒரு ஷூட்டிங்கில் மோனிக்கா பெலுசுசியைப் பார்த்ததும் அந்த சிறுகதையைத் திரைப்படமாக்க முடிவு செய்தார். அதன்படி உருவானதுதான் மலேனா. பொதுப்படையாக பார்க்கும்போது காமச்சுவை வெளிப்பட்டாலும் இது முழுக்க முழுக்க அவலச்சுவையை உள்ளடக்கிய ஒரு அற்புதப்படைப்பு. மலேனாவை மார்க்கெட்டில் வைத்து பிற பெண்கள் அடிக்கும் காட்சியில் அவள்  பரிதாபமாக அங்கு நிற்கும் ஆண்களைப் பார்க்கும் பார்வை, நம் ஒவ்வொருவரையும் ஒருநிமிடமாவது யோசிக்கவைத்துவிடும். அற்புதமான ஒளிப்பதிவும் அழகியல் இசையும் படத்தை, படைப்பாக மாற்றிவிடுகிறது. ஒரு சாதாரண சிறுகதையை வைத்து அதை எப்படியெல்லாம் மெருகேற்ற முடியுமோ அவ்வளவு வித்தையும் திறம்பட செய்து சிறுகதை ஏற்படுத்திய தாக்கத்தினைக் காட்டிலும் பலமடங்கு தாக்கத்தை நம்முள்ளே ஏற்படுத்திவிடுகிறார் இயக்குநர் தர்னேத்தோர்.  மலேனா பார்த்தபின் அழகான பெண்ணைப் பார்த்தும் புணர்ந்துவிடவேண்டும் என்று எண்ணும் மனோபாவம் குறைந்தபட்சம் நம்மிடமிருந்து ஒருமாதமாவது ஓடிஒளிந்துகொள்ளும். நமக்குக்கிடைக்காத ஒரு அழகான பெண்ணை, நம் நண்பர்களின் மத்தியில் ஐட்டம் என்று கூறும் கேவலமான சேடிச எண்ணம் ஓரளவாவது ஓடி ஒளிந்து கொள்ளும்.


பின்குறிப்பு – படத்தில் ரெனோட்டாவின் அப்பாவாக வருபவர் செய்திருக்கும் அட்டகாசங்கள் கண்டிப்பாக சிரிக்கவைத்துவிடும். மலேனாவின் அழகிற்காக இரண்டு முறை எனில் அவருக்காக மூன்றாவது முறை பார்க்கவைத்துவிடும் இத்திரைப்படம்.

Comments

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

THE PURGE – சினிமா விமர்சனம்