24 - சினிமா விமர்சனம்



வழக்கமாக நான் திரைப்படம் செல்வதென்றால் குறைந்தபட்சம் ஒரு ஆறுபேரையாவது உடன் அழைத்துச் செல்வதுதான் வழக்கம்.  பெரும்பாலும் என்னுடன் வருபவர்களும் நான் செலக்ட் செய்யும் திரைப்படத்திற்கு ஓ.கே சொல்லிவிடுவார்கள். ஆனால் இந்த வாரம் பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொண்டேன். ஒருபுறம் 24, இன்னொருபுறம் CAPTAIN AMERICA-CIVIL WAR. இரண்டுமே நான் மிகவும் எதிர்பார்த்திருந்த திரைப்படங்கள். அவெஞ்சர்ஸ் சீரீஸ்களில் நான் ரசித்துப்பார்க்கும் திரைப்படமே கேப்டன் அமெரிக்கா தான். வின்டர் சோல்ஜருக்கு அடுத்து மீண்டும் கேப்டனைப் பார்க்க 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதேபோல் என்று 13B பார்த்தேனோ அன்றிலிருந்து விக்ரம் குமாரின் ஒரு திரைப்படத்தையும்  விடாமல் பார்த்துவருகிறேன். இப்படி ஒரு இக்கட்டான சிக்கலில் நான் 24-ஐ நண்பர்களுக்கு பரிந்துரைக்க, என்னுடன் ஒருவர் மட்டும் கைகோர்க்க, ஏறத்தாழ 5 பேர் எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்யும் நிலையில் இருந்தனர். படம் நன்றாக இல்லையென்றால் டிக்கெட் காசை நான் கொடுத்துவிடுகிறேன் என்று கூறி இழுத்துச் சென்றேன். 

ஆனால் திரைப்படம் ஆரம்பித்து சரியாக 5-வது நிமிடத்தில் வாயைப் பொழந்து பார்க்க ஆரம்பித்தவர்கள்தான். என்ன படம் முடிஞ்சிடுச்சா எனும் அதிர்ச்சியில் தியேட்டரை விட்டு வெளியே வந்தார்கள். டைம்மெஷின் கான்செப்ட் ஹாலிவுட்டுக்கு புதிதல்ல. ஆனால் தமிழுக்கு ? நேற்று இன்று நாளை தவிர குறிப்பிடும்படியான டைம்மெஷின் திரைப்படம் கிடையாது. நேற்று இன்று நாளை திரைக்கதையில் காட்டிய  பிரம்மாண்டத்தை விஷுவலில் காட்டமுடியாத பட்ஜெட்டில் உருவானது. ஆனால் 24 நல்ல பட்ஜெட்டில் உருவாகி உள்ளது; நல்ல திரைக்கதையுடனும். 

1990-ல் சேதுராமன் எனும் விஞ்ஞானி ஒரு டைம் ட்ராவல் வாட்சைக் கண்டுபிடிக்கும் நாளில் அவரின் அண்ணன் ஆத்ரியா (டியா? காபியானு கேக்காதிங்க) தன் அடியாட்களுடன் வந்து சேதுராமனின் மனைவியைக் கொன்றுவிட்டு வாட்சை அபகரிக்க நினைக்கிறார். அந்நேரம் வாட்ச் மற்றும் குழந்தையை எடுத்துக்கொண்டு தப்பிக்கும்  சேதுராமன் ஒரு ரயிலில் ஏறி தன் குழந்தையை ஒரு இளம்பெண்ணிடம் கொடுத்துவிட்டு ஆத்ரேயனிடம்  மாட்டிக்கொள்கிறார். ஆத்ரேயன் சேதுராமனைக் கொன்றுவிட்டு குழந்தையைக் கொல்ல நினைக்கும்போது பாம்  மாதிரியான ஒரு கேட்ஜெட்டில் கௌன்ட் டவுன் ஓட, பாம் வெடிக்கப்போகிறது என்றெண்ணி ரயிலில் இருந்து ஒரு பாலத்தின்கீழ் குதிக்கிறான். அத்தோடு அவன் கோமாவிற்கு சென்றுவிடுகிறான்.

26-ஆண்டுகளுக்குப் பின் வாட்ச் மெக்கானிக்காக இருக்கும் மணி, தன் தாய் சத்யாவுடன் சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார். அவர்தான் சேதுராமனின் மகன் என்று தனியாக சொல்லவேண்டியதில்லை.  வாட்சை ஒரு குட்டிப் பெட்டியில் வைத்து அதற்கென சாவியும் செய்திருப்பார் சேதுராமன். வாட்ச் இருக்கும் பெட்டி மகன் மணியிடமும், சாவி கோமாவில் இருக்கும் ஆத்ரேயனிடமும் இருக்கிறது. ஆத்ரேயா கோமாவில் இருந்து எழ, இன்னொருபுறம் சாவி மணியிடம் வந்தடைகிறது. எதேச்சையாக சாவியை உபயோகித்து வாட்சை ஆக்டிவேட் செய்கிறான் மணி. வாட்சின் மூலம் டைம் ஃப்ரீஸ் செய்வதுடன் முன்னும் பின்னும் சென்றுவரலாம் என மணி கண்டறிகிறான். இன்னொருபுறம் ஆத்ரேயனுக்கோ வீணான 26 வருடங்களை சரிசெய்ய, தான் குதித்த அந்த நாளுக்கு சென்றுவர வாட்ச் தேவைப்பட, அதைத் தீவிரமாக கண்டறிய முனைகிறான். ஒரு கட்டத்தில் ஆத்ரேயன் மணியைக் கண்டுபிடித்து கொன்றுவிடுகிறார். இன்டர்வெல். இதன்பின் என்ன ஆனது என்பதை நீங்களே தியேட்டரில் பார்த்து எக்சைட் ஆகுங்கள். அப்படியே இடையிடையே சமந்தா காதல்காட்சிகளும் நடக்கிறது என்பதனையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

2010-ல் சிங்கம் திரைப்படத்திற்குப்பின் சூர்யாவால் ஒரு ப்ளாக்பஸ்டர் ஹிட்டைக் கொடுக்கமுடியவில்லை என்பதே உண்மை. சிங்கம் 2 ஹிட் என்றாலும்  பேர் சொல்லும்  படம் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. இப்போது மீண்டும் அவருக்கு அடித்திருக்கிறது அந்த ப்ளாக்பஸ்டர். 6 வருடக் காத்திருப்புக்கு சரியான பலன் இந்த 24. அதனால்தான் என்னவோ தன் தயாரிப்பு நிறுவனமான 2D-யின் மூலம் தானே தயாரித்துள்ளார். ஏறத்தாழ 80 கோடி பட்ஜெட்டில் உருவான திரைப்படம். அதேபோல் நடிப்பிலும் சூர்யா மூன்றுவிதமான தோற்றங்களை மிகச்சரியாக பயன்படுத்தியுள்ளார். ஆனால் விளம்பரப்படுத்தியது போல் பெரிய வில்லத்தனம் இல்லை எனினும் ப்ரில்லியன்டான வில்லன் ஆத்ரேயனாக கலக்கியிரு்ககிறார். வீல்சேரில் அமர்ந்துகொண்டே மிரட்டலாக பார்க்கும்போது நம்மையே பயமுறுத்துகிறார். மித்ரன் என்று சூர்யா அஜயைக் கூப்பிடும்போதெல்லாம் ஏதோ பேய் படம் பார்த்த எஃபெக்ட் வருகிறது. மணியாக வரும் சூர்யா , ‘இங்க எல்லாமே இருக்கு. நம்ம கட, நம்பி வாங்குங்க’ என்று சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் நடித்ததை அப்படியே செய்திருக்கிறார். ஒருவேளை எல்லா விளம்பரத்திலும் நடித்ததால் எனக்கு அப்படி தோன்றியதா எனத் தெரியவில்லை. அந்த விளம்பர மேனரிசத்தை சூர்யா மாற்றியே ஆகவேண்டும். சயின்டிஸ் சேதுராமனாகவும் சூர்யா நன்கு செய்துள்ளார். அந்த கேரக்டரைசேசன் க்ரிஷ் திரைப்படத்தில் தந்தை ஹிருத்திக்கை நியாபகப்படுத்துகிறது. 

மணியின் காதலியாக வரும் சமந்தாவை இவ்வளவு அழகாக நான் பார்த்ததே கிடையாது. ஏதோ மெழுகு பொம்மையைப் போல் இருக்கிறார். இந்த படத்தில் சமந்தாவைக் கண்டிப்பாக எல்லாருக்கும் பிடிக்கும். அதேபோல் நடிக்கவும் ஆங்காங்கே வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. நித்யாமேனனுக்கு பெரிதாக வேலையில்லை. சரண்யா பொண்வண்ணன் இரண்டாம் பாதியில் சூர்யாவிடம் சென்டிமென்டாக பேசும் காட்சியில் கலக்கியிருக்கிறார். சத்யன் கலகலக்க வைக்கவில்லை எனினும் நேரத்தைக் கடத்த உபயோகப்பட்டிருக்கிறார். மற்றகேரக்டர்களில் தெலுங்கு நடிகர் அஜய்யின் கதாபாத்திரவடிவமைப்பு அட்டகாசம்.  மற்ற கேரக்டர்கள் கொடுக்கப்பட்ட பாத்திரங்களைச் சரியாகச் செய்துள்ளனர்.

படத்தின் பெரும்பலம் திரைக்கதையும் விஷுவல்களும் பிண்ணனி இசையும் என்றால் பலவீனம் திராபையான வசனங்கள். சூர்யா குறைந்தபட்சம் 24 முறை  I AM A WATCHMECHANIC மற்றும் ஜெனரலா எனக்கு ஜெனரல்நாலேஜ் அதிகம் என்று கூறியிருப்பார். ஒருகட்டத்தில் தாங்கவேமுடியாத கடுப்பு ஏறிவிட்டது. வேண்டுமென்ற கடுப்பேத்த உருவாக்கப்பட்ட வசனம் போலிருந்தது. அதேபோல் ஃப்ரீஸ் செய்தபின் காட்டப்படும் காட்சிகள் X-MEN DAYS OF FUTURE PAST-ல் வரும் மேக்ஸிமாஃப் மியூட்டன்டை நியாபகப்படுத்துகிறது. இருந்தாலும் வேறுவழியில்லை. விக்ரம் குமார் இத்திரைப்படத்தின் திரைக்கதை எழுதிய ஆண்டு 2009 என்பதால் இதை இன்ஸபிரேசன் எனக்கொள்ளலாம். மற்றபடி படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளின் தரத்தை இதுவரை வெளிவந்த எந்தவொரு இந்தியத் திரைப்படங்களோடும் ஒப்பிடமுடியாதவண்ணம் அட்டகாசமாக உருவாக்கியிருக்கிறார்கள். குவாலிட்டியில் அப்படியே ஹாலிவுட் மேக்கிங்.

 பாடல்களில் காட்டப்படும் ஷாட்கள், படத்தின்  விஷுவல் அவுட்புட் என தெறிக்கவிட்டிருக்கிறார் விக்ரம் குமார். இதை சாத்தியப்படுத்திய ஒளிப்பதிவாளர் திருவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.  அதேபோல் ஏ.ஆர். ரஹமான் ஒரு இசைச்சாம்ராஜ்யமே நடத்தியுள்ளார். பிண்ணனி இசை படுபயங்கரமாக போட்டிருக்கிறார். படத்தை ஒளிப்பதிவும் பிண்ணனி இசையும் நகர்த்திச்செல்லும் அழகே அட்டகாசம்.  24 திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் எனக்குப் பிடிக்குமென்றாலும் புன்னகையே பாடல் என்னுடைய பேவரைட். ஆனால் அது படத்தில் வரவில்லை. மற்ற பாடல்கள் எடுக்கப்பட்டவிதம் அருமை எனினும் மெய்நிகரா புன்னகையே பாடல் ஏதோ ஒரு இன்கம்ப்ளிட் ஃபீலையே கொடுத்தது. எடிட்டர் ப்ரவின் புடி தெலுங்கில் செம பேமஸ். அவர் மிகச்சரியாக எடிட்டிங்கைச் செய்துள்ளார்ர எனலாம். எந்த காட்சியும் நீக்கவேண்டியதே இல்லை; சொல்லப்போனால் இன்னும் காட்சிகளைச் சேர்த்திருக்கலாமோ என்ற எண்ணமே வந்தது. 

விக்ரம் குமார் ஆரம்பத்தில் இத்திரைப்படத்தை நடிகர் விக்ரமிடம் 2009-ல் கொண்டு செல்ல, விக்ரம் மறுத்துவிட்டார். அதேநேரத்தில் இஷ்க் மற்றும் மனம் ஆகிய திரைப்படங்களில் பிஸியாக வி.குமார் இருக்க, எப்படியோ இந்த கதையை மோப்பம்பிடித்து சூர்யாவே தயாரிக்க ஆரம்பித்தார் என வதந்தி உலவுகிறது. எப்படியிருந்தாலும் படத்தை மிகச்சிறப்பாகவே நமக்குக் கொடுத்துள்ளார்.  படத்தின் திரைக்கதையைப் பார்க்கும்போது ஏதோ கிறிஸ் நோலன் திரைப்படத்தைத் தமிழில் பார்த்தது போன்றதொரு உணர்வு. நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று கொடுக்கும் பழமொழியை அப்படியே ஆடியன்ஸ் ஒன்று நினைக்க டைரக்டர் ஒன்று கொடுக்கிறார் என மாற்றிப் போட்டுக்கொள்ளலாம். தியேட்டரில் நம்மை அடுத்து என்ன சீன் என்று யோசிக்கவே விடாமல் படபடவென நகர்த்திச்செல்கிறது திரைக்கதை. ஒவ்வொரு சீனிலும் வில்லனும் ஹீரோவும் மாற்றி மாற்றி, மாட்டிக்கொள்வாகளோ என்ற பரபரப்புடனே செல்கிறது. 

சயின்ஸ் பிக்சன் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் தவறவிடக்கூடாத திரைப்படம். ஆங்காங்கே ஹாலிவுட் திரைப்படங்களின் தாக்கம் மின்னினாலும் குறையென்று அதை சொல்லிவிடமுடியாது. அட்டகாசமான மேக்கிங், பரபர திரைக்கதை, விசுவல் பிரசன்டேசன், சிஜி செய்யப்பட்ட விதம், பாடல்கள் மற்றும்  பிண்ணனி இசை போன்றவற்றிற்காக எத்தனைமுறை வேண்டுமானாலும் பார்க்கலாம்; சூர்யாவுக்காகவும் தான். 

Comments

  1. அருமை. நேற்று படம் பார்த்தேன். எனக்கு ஒகே . ஆனால் என்னுடன் வந்த நண்பர்கள் 20 பேரும் என்னை வருத்தேடுத்துவிட்டனர்

    ReplyDelete
  2. The Raging Bull Casino Resort Tickets - Jackson - KT Hub
    Tickets can be purchased at The Raging Bull Casino Resort. Event details. 문경 출장샵 The 여주 출장마사지 Raging Bull Casino Resort 여수 출장안마 is a casino hotel in 오산 출장샵 Jackson, Mississippi, Jan 15, 2022Randy HouserJan 부천 출장안마 16, 2022Randy Houser

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

THE PURGE – சினிமா விமர்சனம்