THE WAY BACK - சினிமா விமர்சனம்





கெட்டோ பற்றி நம் தளத்தில் THE PIANIST , LIFE IS BEUTIFUL போன்ற பதிவுகளில் படித்திருப்பீர்கள் . Gulag பற்றி படித்துள்ளீர்களா ? குலாக் என்பது 1920 – 1950 களின் மத்தியில் சோவியுத் ரஷ்யாவில் இருந்த கைதிகள் முகாமின் பெயரே . இந்த குலாக் என்பது ஜெர்மன் நாஜிக்களின் கெட்டோ போன்ற கொலைவதை செய்யப்படும் முகாம் அல்ல . ஆனால் அதையும்விட கொடூரமான வதைமுகாம்கள் எனலாம் . அன்றைய காலகட்டங்களில் ஸ்டாலின் , தன் அரசிற்கெதிராக செயல்படுபவர்களைக் கட்டுப்படுத்த கொண்டுவந்த சிஸ்டமே இந்த குலாக் . இந்த முகாம்களில் அடைக்கப்படுபவர்களில் பெரும்பாலும் சாதாரண மக்கள் தான் ( போர்க்கைதிகளை அடைப்பதற்கென்று சோவியத் இன்னொரு முகாம்களை நடத்தியது ) . மக்களில் அரசுக்கெதிராக செயல்படுபவர்கள் , முக்கியமாக வெளிநாட்டினர் போன்றோர் இந்த முகாம்களில் அடைக்கப்பட்டனர் . 1939 – ல் , சோவியத் தன்னுடைய எல்லையை பெரிதாக்கும்பொருட்டு , போலந்து நாட்டின்மீது படையெடுத்தது . கிழக்கு நோக்கி முன்னேறும் ரஷ்யர்களைத்தடுக்கலாம் என்று போலந்து நாடு நினைப்பதற்குள் , மேற்கில் ஹிட்லரின் நாஜிப்படை அதகளம் புரியத்துவங்கியது . ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பை , அப்போதைய உலகநாடுகள் கண்டிக்கமுடியா வண்ணம் அவர்களின் நிலை இருந்ததது . ஏனெனில் கண்ணெதிரில் உலகையே அச்சுருத்திக்கொண்டிருக்கும் நாஜிப்படையை அழிக்க , ரஷ்யர்களின் உதவி கண்டிப்பாக தேவையென்பதால் , ரஷ்யாவின் அட்டூழியம் வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டு அதேநேரம் ஹீரோபோல் சித்தரிக்கப்பட்டது . அப்போதைய போலந்துநாட்டின் அரசு அதிகாரிகளில் பெரும்பாலோனர் , ரஷ்யாவினால் கைது செய்யப்பட்டனர் . அவர்களால் போலந்தில் ரஷ்யப்படையினருக்கு பாதிப்பு வரலாம் என்ற காரணத்தால்  , அவர்களை கைது செய்து குலாக் முகாமில் அடைக்கப்பட்டனர் . அவர்கள் செய்த குற்றங்களாக , ரஷ்யா சொன்ன விஷயங்களை , கைதுசெய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரை மிரட்டியே ரஷ்யா சொல்லவைத்தது . இவ்வாறு சிறைதண்டனை பெறுபவர்கள் நீண்டகாலம் தங்களின் வாழ்க்கையினை இந்த முகாம்களில் தான் கழிக்கவேண்டும் . நாஜிப்படைகளின் முகாம்களைக்காட்டிலும் இந்த முகாம்களில் அதிகளவு வேலை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு . நம்பினால் நம்புங்கள் , இரண்டாம் உலகப்போரின்போது ரஷ்யாவின் மொத்த உற்பத்திகளில் 46 % நிக்கல் ,  40 % கோபால்ட் , 40% இரும்பு குரோமியம் தாது , 60% தங்கம் போன்றவை இந்த முகாம்களில் இருந்து தான் உற்பத்தி செய்யப்பட்டன . அப்படியென்றால் எந்தமாதிரி வேலை வாங்கியிருப்பார்கள் என்று நினைத்துப்பாருங்கள் .இதைக்காட்டிலும் மிகப்பெரும் கொடுமையென்னவெனில் ,இந்த முகாம்களின் பெரும்பகுதி , ரஷ்யாவின் துருவப்பகுதிகளான சைபீரியா , வோர்குடா போன்ற இடங்களில்தான் இருந்தன . கடும்பனி பொழிவினாலே இங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை சொல்லிமாளாது .   ஏறத்தாழ இம்முகாம்களில் 1929 - 1959 வரை அடைக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை ஒரு கோடியைத்தொடும் . அதில் முகாமில் அடைபட்ட 16 லட்சம்பேருக்குமேல் பனியினால் இறந்துவிட்டார்கள்  என்று அறிக்கை கூறுகிறது . 1929 – க்குமுன் அடைகப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் உண்மை நிலவரம் தெரியவில்லை . மேலும் தப்பித்தவர்கள் பற்றியோ , காணாமல் போனவர்கள் பற்றியோ ஒருவிபரமும் இதுவரை ரஷ்யா தெரிவிக்கவில்லை .




சரி , படத்திற்கு வருவோம் . ஜானுஷ் எனும் பாலிஷ் , போலிஸ் அதிகாரி , ரஷ்ய ராணுவத்தால் கைதுசெய்யப்படுகிறான் .  அவனுடைய மனைவியின் மூலமே அவன் ஒரு ஸ்பை என்று கூறப்பட்டு 20 ஆண்டுகள் குலாக் முகாமில் அடைக்கும்படி தண்டனைபெறுகிறான் . அவனை சைபீரியாவில் இருக்கும் ஒரு குலாக்கிற்கு அழைத்துச்சென்று அடைத்துவிடுகிறார்கள் .  அங்கே ஜானுஷ் 6 நண்பர்களை உருவாக்கிக்கொள்கிறான் . அவர்களின் உதவியோடு குலாக்கிலிருந்து தப்பிக்கிறான் . அங்கு பெய்யும் பனியைப்பார்த்தால்  நமக்கெல்லாம் கடுங்குளிரிலும் வேர்த்துவிடும் .ஆனால் , ஜானுஷ் மற்றும் அவன் குழுவினர் சுதந்திரக்காற்றை சுவாசிக்கவேண்டும் என்ற வெறியில் கஷ்டபட்டு கடப்பார்கள் . அவர்களின் பயணம் மங்கோலியாவை நோக்கி இருந்தது . பசி , காலநிலை , இயற்கை இடர்கள் , கொடும் மிருகங்கள் என பல தடைகள் தாண்டி செல்வார்கள் . இடையில் இவர்களின் குழுவோடு ஒரு பெண் இணைய , அவளையும் அழைத்துக்கொண்டுச் செல்வார்கள் . அக்குழுவில் இருக்கும் ஒருவன் , தன் ரஷ்யாவினைத்தாண்டி வரமாட்டேன் என்றுகூறிவிட்டு இவர்களை பிரிந்துவிடுவான் . நடுநடுவில் ஒருவர்பின் ஒருவராய் மரணத்தை சந்திக்க , கடைசியில் வெப்பமிகு மங்கோலிய பாலைவனத்தை அடைவர்கள் . ஆனால் அங்கும் ஸ்டாலினின் கம்யுனிஷ ஆட்சி நடைபெற , வேறுவழியில்லாமல் இந்தியாவை நோக்கி அவர்கள் பயணிப்பார்கள் . காடுகளிலாவது , குடிக்க தண்ணீராவது கிடைக்கும் . வறண்ட பாலைவனத்தில் எதுவும் கிடைக்காமல் முகத்தில் தோலேல்லாம் வெடித்து , சாகும் நிலைக்குச்சென்றுவிடுவார்கள் . அந்த பாலைவனத்தில் அந்த பெண்ணும் இறந்துவிட , ஜானுஷ் மற்றும் இன்னொருவர் மட்டும் பிழைத்து நேபாளத்தை அடைவார்கள் . அங்கே இவர்களின் பயணத்துக்கு பெரும் முட்டுக்கட்டையாய் எவரெஸ்ட் இருக்கும் . அதன்பின் என்ன ஆனது என்பதே இப்படத்தின் கிளைமேக்ஸ் .



THE LONG WALK எனும் பெயரில் 1956 – ல் வெளிவந்த ஒரு நாவலின் பாதிப்பினால் எடுக்கப்பட்டதுதான் இத்திரைப்படம் . நாவலின் ஆசிரியர் ஸ்லாவ்மீர் எனும் போலந்துக்காரர் , தன் அனுபவத்தையே நாவலாக எழுதியிருப்பதாக செய்தி . அவருடைய நாவலில் கம்யுனிசத்திற்கு எதிரான தனது குரலை அவர் பதிவு செய்ததாக ஒரு எண்ணம் . மொத்தம் 4000 கி.மி பயணத்தை அற்புதமாய் நமக்குக்காட்டியிருக்கிறார்கள் . இப்படத்தின் வழியே மனிதத்தையும் சுதந்திர வேட்கையையும் அழகாய் சித்தரித்திருப்பார்கள் .  மேலும் ரஷ்யாவின் அடர்ந்த பனிப்பொழியும் பிரதேசங்களாகட்டும் , அடர்ந்த காடுகளாகட்டும் , ஆறு , குளம் , கடல்,  பாலைவனம் , மலைப்பிரதேசம் என தமிழின் ஐவகைத்திணைகளையும் அற்புதமாய் படமாக்கியிருப்பார்கள் . அந்த லொகேசன்களுக்காகவே தாரளமாய் ஒருமுறை இப்படத்தைப்பார்க்கலாம் .இந்த படத்தின் டைரக்டர் பீட்டர் வேர் , ஆஸ்கார் நாமினேட் ஆவதெற்கென்றே பிறந்தவர்போல . இதுவரை சிறந்த இயக்குநர்க்கான ஆஸ்கார் நாமினேஷன் லிஸ்ட்டில் 4 முறை வலம் வந்திருக்கிறார் . ஒரு கூடுதல் தகவல் , ஒப்பனைக்காக ஆஸ்கார் நாமிநேட் ஆன படம் இது . ரஷ்யப்படையின் சிறைக்காட்சிகளை இன்னும் வலியுடன் காட்டியிருந்தால் , படம் கண்டிப்பாய் கொண்டாடப்பட்டிருக்கும் . ஆனால்  அதையும் தாண்டி ஒரு அழகான கவிதை போன்ற இப்பயணத்தை தாராளமாய் பார்க்கலாம் .



தொடர்புடைய சினிமா விமர்சனங்கள்









Comments

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

THE PURGE – சினிமா விமர்சனம்