பயணம் @ டைம்மெஷின் - 11



உயிரும் உணர்வும்


முந்தைய பதிவுகள்



இருவருக்கும் ஒன்றும் புரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறே இருந்தனர் .

‘ம் கிளம்புங்கள் .’ என்ற தலைமைக்காவலனின்  குரலுக்கு அடங்கி எழுந்தனர் . தலைமைக்காவலன் முன்னே செல்ல , பின்னாள் சந்துருவும் பாலாவும் வந்தனர் . அவர்கள் இருவரின் கழுத்தையும் பதம் பார்க்கும்வண்ணம் ,  சுற்றியும் வேல்கள் இருக்க , அந்த வேல்களை உடைய வீரர்கள் அவர்களை பாதுகாத்த வண்ணம் கிளம்பினர் . மண்டபத்தைத்தாண்டி வெளியே வரும் நேரம் ‘ஐயகோ’ என்ற குரலும் அதைத்தொடர்ந்து வாள்களும் வேலும் மோதிக்கொள்ளும் சத்தமும் கேட்டது . இவர்கள் இருவரையும் கைது செய்து கிளப்பிய நேரத்தில் வளவன் துரிதமாக செயல்பட ஆரம்பித்திருந்தான் . கடைசியாக சென்ற வீரனின் தோளை தட்டினான் . அவன் திரும்புவதற்குள் வேகமாக குனிந்து தன் கால்களால் அவனின் கால்களை கிடைமட்டமாக தாக்கினான் . நிலைகுனிந்த வீரன் சட்டாரென கீழே விழ , அவனின் வேலை எடுத்து அவனின் பின்கழுத்தில் இறக்கினான் . அந்த சத்தம் கேட்டு பாலாவையும் சந்துருவையும் சுற்றியிருந்த வீரர்களில் ஒருவன் வேகவேகமாக வளவனை நோக்கி வர , வளவன் கீழே இறந்து கிடந்த வீரனின் உடைவாளை துரிதமாக எடுத்து , அருகிலிருந்த மூட்டையின்மேல் கால்வைத்து ஒரே எகிறாக நேரே அந்த வீரனின் தலைக்கு தன் வாளை குறிவைத்து செலுத்தினான் . அவனின் மண்டை பிளக்கும்போது அவ்வீரன் ஏற்படுத்திய சத்தமே ‘ஐயகோ’ என்று றை முழுதும் எதிரொலித்தது . அதன்பின் ஐந்து வீரர்கள் பாலாவையும் சந்துருவையும் விட்டுவிட்டு வேகவேகமாய் வளவனை நோக்கி ஓடினார்கள் . ஒரே நேரத்தில் தன்னைநோக்கி வந்த வேல்கள் அனைத்தையும் தன் பலம்முழுவதையும் வாளில் கொண்டு வந்து தடுத்தான் . தடுத்த உடனே அவன் மறுகையிலிருந்த வேல் , கீழே காவலர்களின் கால்நோக்கி விசிறியது . அவர்களின் காலிலிருந்து சீரிய செங்குருதி , வளவனின் மார்பில் சூடாகத்தெளித்தது . அவர்கள் நிலைதவறி விழும்போது வளவனின் வாள் அவ்வைந்து பேரின் கழுத்தைக்குறிவைத்து சுழன்றது . வாளுடன் சேர்ந்து தலைகளும் குருதி தெளிக்கும் வண்ணம் அவர்களின் உடலிலிருந்து கழன்றது . அதற்குள் பின்னாளிலிருந்து இரு வீரர்கள் வளவனின் கழுத்தில் வேலை வைத்தனர் . மீதமுள்ள வீரர்கள் வளவனின் நெஞ்சில் வேல்களை வைத்தனர் . ஆனால் யாரும் உள்ளே வேலை பாய்ச்சவில்லை .

‘நிறுத்துங்கள்’ என்ற சத்தம் வந்த திசைநோக்கி அனைவரும் பார்த்தனர் . தலைமைக்காவலன் வளவனை நோக்கி நடந்து வந்தார் .

‘இளவரசரே ! எங்களின் கடமையைச்செய்ய விடுங்கள் .’ என்று கூறிவிட்டு , அங்கிருந்த வீரர்களை , வேல் மற்றும் வாளைக்கொண்டு வளவனை சிறிதுநேரம் பாதுகாக்க வைத்துவிட்டு சந்துருவையும் பாலாவையும் கூட்டிக்கொண்டு சென்றார் . இவ்வையெல்லாம் நடந்துமுடிய வெறும் பத்து விநாடிகளே ஆகியிருந்தது . மண்டபத்தினுள் நடந்த எதுவும் தெரியாமல் விழிபிதுங்கிய வண்ணம் வாயிலில் நின்று கொண்டிருந்த சந்துருவும் பாலாவும் , திடுமென ஐந்து தலைகள் கழன்று விழுவதைப்பார்த்ததும் அதிர்ச்சியாயினர் . மேலும் உள்ளே இளவரசே என்று தலைமைக்காவலன் அழைத்தது மேலும் வியப்பூட்டியது . அதன்பின் தலைமைக்காவலனுடன் இருவீரர்கள் வர அவர்களுக்கு நடுவில் வாளின் முனையில் சந்துருவும் பாலாவும் வந்தனர் . அரண்மனை நோக்கி செல்லும் வழியில் இருவரும் மரணபயத்தை சிறிது  நடுக்கமுற்றுத்தான் இருந்தனர் . ஆனாலும் , ஒருவனைக்காப்பாற்றியதற்காக கைது செய்வதெல்லாம் அநியாயம் என்பதை மன்னரிடம் எடுத்துக்கூறி தப்பித்துவிடலாம் என்று இருவரும் ஒரேமாதிரியாக யோசித்தனர் . சோழமன்னர்கள் நீதிநெறி தவறாமல் ஆட்சிசெய்ததை கண்கூடாக பார்த்ததினால் , அவர்களுக்கு மரணபயம் அவ்வளவாக இல்லை .சந்துருவுக்கு மாத்திரம் , ஒருவேளை அவளை சந்திக்காமலே இறந்துவிடுவோமோ என்ற பயம் அவ்வப்போது வெளிப்பட்டது . ‘ச்சீ ! என்ன கருமாந்திரம் பிடித்த காதலோ ! பெற்றெடுத்த தாயின்முகம் காணத்துடிக்காத மனது , காலையில் கண்ட ஒருதலைகாதலியை எண்ணுவது என்னே மடமைத்தனம் ! ’ என்று தன்னைத்தானே திட்டினான் . அவனின் தாயும் தந்தையும் கண்முன்னே வந்தனர் . கடந்த மூன்றாண்டுகளாய் தான் சந்துரு வேலைக்குச்செல்ல ஆரம்பித்திருந்தான் . அதற்குமுன் வரை தனக்காக உழைத்த தன் தாயையும் தந்தையையும் எந்தவொரு நொடியிலும் வருந்தவைக்ககூடாது என்று முடிவெடுத்திருந்தான் . அந்த முடிவை முடிந்தவரை உறுதியாய் காப்பாற்றவும் செய்தான் . அவர்களைப்பற்றி எண்ணும்போதுதான் தனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த நிகழ்ச்சியும் , தனக்குத்திருமணம் ஆகப்போவதையும் , தன்னை நம்பி ஒரு பெண் எதிர்காலத்தில் இருப்பதையும் உணர்ந்தான் . என்ன காரணத்தினாலோ , சந்துருவுக்கு நகரத்து பெண்களின் மீது அவ்வளவாக ஈடுபாடில்லை . தனக்கு பெண் பார்க்க போகும்போது கூட நவநாகரீக மங்கையைக்காட்டிலும் , கிராமத்து மங்கையே வேண்டும் என தன் பெற்றோரிடம் உறுதியாய் சொன்னவன் . அப்படி பார்த்து பார்த்து தேடிப்பிடித்தவள் தான் மைதிலி . அவனுக்குப்பிடித்துப்போக , சித்திரையில் திருமணத்தேதியை குறித்தனர் . மைதிலியுடன் அவ்வபோது போனில் பேசுவதோடு சரி . இதோ , காலையில் சந்தித்த மங்கையின் வீடு . அவள் வீட்டினுள் தான் இருக்கிறாளோ என பார்க்க சந்துருவுக்கு ஆசை வந்தது . ஆனால் , வீட்டின் கதவு சாத்தப்பட்டிருந்தது .மாடத்தை நோக்கி தன் பார்வையை செலுத்தினான் .  அங்கும் யாருமில்லை . என்னே மடத்தனமான எண்ணம் என்னுடையது என்று எண்ணியவாறே தலையை குனிந்து நடந்தான் . அவள் எதற்கு இவனுக்காக இவ்விரவில் காத்துக்கொண்டிருக்க வேண்டும் ? நாம்தானே அவளின்மீது ஆசை கொண்டோம் . 21 – ம் நூற்றாண்டைச்சார்ந்த நமக்கு , இன்னும் பெண்களின் குணம் பற்றி அறியாமல் அவள் நமக்காக காத்திருப்பாள் என்பது எவ்வளவு மூடத்தனமான எண்ணமாயிருக்கவேண்டும் என்றவாறே தன் நடையைக்கட்டினான் .

பாலாவுக்கு , மனதில் சிறிது மரணபயம் இருந்தாலும் அதைவெளியில் காட்டிக்கொள்ளவில்லை . அவனுக்கு டைம்ட்ராவல் மீது அதீத ஆர்வம் வரக்காரணம் என்னவோ தமிழ்நாட்டின் சந்திரசேகர் தான் . அவரின் சந்திரசேகர் விளைவு எனும் ஆராய்ச்சியையும் , ஐன்ஸ்டைனின் வார்ம்ஹோல் தியரியையும் படித்ததாலே பைத்தியமானான் . எப்படியாவது டைம்மெஷினை கண்டுபிடித்தாகவேண்டும் என்று உறுதிபூண்டவன் , அதற்காக தன்னுடைய 3 ஆண்டுகளை ஒரே அறையில் , இயற்பியலுடனும் , எந்திரங்களுடனும் கழித்தான் . அதைத்தாண்டி அவனுக்கு வேறு எதன்மேலும் பற்று அதிகமாய் இருந்ததில்லை . தந்தை இறந்து பத்து ஆண்டுகள் ஆகிற்று . ஏதோ அவர்போகும்போது சேர்த்துவைத்துவிட்டுப்போன சொத்துகள் மற்றும் மைலாப்பூரில் இருக்கும் அவர்களது காம்ப்ளக்ஸ் வாடகை போன்றவற்றால் காலந்தள்ளிக்கொண்டிருக்கும் குடும்பம் அவனுடையது .வீட்டினுள் டீவி சீரியலை சீரியஸாக பார்க்கும் தாய் என்றாலும் பாலாவின்மேல் அவனின் தாய்க்கு அதிக கவலை .  மற்ற இளைஞர்களைப்போலில்லாமல் ஆராய்ச்சியிலே மூழ்கிக்கிடக்கும் மகனை நினைத்து கவலைப்படாமல் எப்படி இருக்கமுடியும் . நம் நாட்டிற்கு ஐன்ஸ்டைன்கள் தேவை தான் . ஆனால் நமது வீட்டிற்கு ஐன்ஸ்டைன்கள் தேவையில்லை என்று எண்ணும் அதிகபட்ச சாதாரண மனநிலைதான் இன்னும் ஒவ்வொரு வீட்டிலும் நிகழ்கிறது .

அவர்களின் இருவரும் காவலர்களுடன் செல்லும்நேரத்தில் , ஒரு வீட்டின் மாடத்தில்  ஒரு இதயம் தனது வழக்கமான துடிப்புகளைக்காட்டிலும் அதிகமாய் துடித்துக்கொண்டிருந்தது . அது பூங்குழலி எனும் இளம்மங்கையின் இதயமே தான் . பூங்குழலிக்கு சிறுவயதிலிருந்தே , ராஜகுமாரனையொத்த ஒருவன் தன் கழுத்திற்கு மாலையிடுவது போன்ற கனவு அடிக்கடி வரும் . ஆனால் , சிறிது நாட்களாக அவளுக்கு சில துர்சம்பவங்களும் , கெட்ட கனவுகளும் வருவது அவளைப்பாடாய் படுத்தி எடுத்தது . தான் சந்தித்த ராஜகுமாரனை இருள் விழுங்குவது போலவும் , அவள் யாருமற்ற இருட்டில் தன்னந்தனியே கதறுவது போலவும் கனவு வந்து அவளை வாட்டியது . அந்த கனவு வரும் வேளைகளில் படக்கென்று கண்விழித்துக்கொள்வாள் . இப்படியாக கழிந்துகொண்டிருந்த நாட்களில் தான் இன்று காலையில் அவள் சந்துருவைப்பார்த்து மனதைப்பறிகொடுத்தாள் . அன்றைய இரவும் ராஜகுமாரனாய் சந்துரு கனவில் வரவும் , அவன் திடிரென இருளில் செல்வதுமாய் இருக்க வேகமாய் கண்விழித்தாள் . அப்படி அவள் கண்விழித்தபோதுதான் அவளின் தந்தையிடம் காவலன் பேசிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சியை கண்டாள் . . தன் தந்தையும் , தஞ்சையின் தலைமைக்காவலருமான வீரமல்லனுக்கு தஞ்சை அரண்மனையிலிருந்து ஒரு காவலன் கொண்டு வந்திருந்த செய்தியைக்கேட்டதுமே அவள் சிறிது கலக்கமுற்றுத்தானிருந்தாள் . இளவரசன் வளவனுக்கு உதவிசெய்த அவ்விரு இளைஞர்களையும் கழுவிலேற்றுமாறு வந்திருந்த அச்செய்தி , ஏதோ துர்நிகழ்ச்சியை உணர்த்துவதாகவே இருந்தது . பின் பூங்குழலியின் தந்தை அங்கிருந்து கிளம்ப , அவள் மாடத்தில் இருந்து என்ன நடக்கிறது என்று படபடக்கும் இதயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள் . அங்கிருந்து மண்டபத்தில் நடக்கும் விஷயங்களை பார்க்கமுடியாதெனினும் , எப்படியும் அரண்மனைக்கு கூட்டிச்செல்ல தன் வீட்டின் வழியைத்தான் பயன்படுத்தவேண்டும் என்று அங்கு வந்திருந்த மூன்று மாதத்தில் உணர்ந்திருந்தாள் . அவர்கள் இருவரும் தப்பித்துவிடக்கூடாதா என்ற நம்பிக்கையில் படபடக்கும் இதயத்தோடு இருந்தவளுக்கு , தன் நம்பிக்கையைச்சுக்கு நூறாக உடைக்கும் வண்ணம் தன் தந்தை அவர்களை அரண்மனைக்கூட்டிச்செல்வதைக்கண்டு மனத்துயரத்தில் ஆழ்ந்தாள் . சிறுவயதுமுதலே தான் விரும்பியது எதுவுமே நடக்காத ஒரு துர்ப்பிறவியான தன்னை மிகவும் நொந்துகொண்டாள் .தான் மட்டும் அவரின்மேல் காதல் கொள்ளாதிருந்தால் இவையாவுமே நடந்திருக்காது என தன்னைத்தானே திட்டிக்கொள்ள ஆரம்பித்திருந்தாள் . அவனைக்காணும் திராணியின்றி தன் படுக்கையை நோக்கி ஓடினாள் .

அன்றைய இரவு  சந்துரு , பாலாவுக்கு நீண்டதொரு இரவாக முடிந்தது . உறக்கம் வராமல் தவித்த அவர்களைக்காட்டிலும் , விடிய விடிய அழுந்து கன்னம் வீங்கி கண்கள் சிவந்து பூங்குழலி காணப்பட்டாள் . விடிந்தபின் அரண்மனைக்குக்கூட்டிச்செல்வார்கள் என இருவரும் காத்திருந்தார்கள் . அவர்கள் இருவரையும் தஞ்சையின் அரண்மனைக்கு பின்புறமிருந்த சிறைச்சாலையில் அடைத்திருந்தார்கள் . விடிந்தவுடன் இருவரையும் சிறைச்சாலையை விட்டு நகரின் ஓரத்திற்கு அருகில் இருந்த ஒரு திடலுக்கு கூட்டிச்சென்றார் . இவர்கள் இருவருக்குமுன் அழைத்துச்செல்லப்பட்ட ஒரு கைதியை அங்கு கழுவேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது . அதைக்கண்டதும் தான் உணர்ந்தார்கள் . தங்களுக்கு வாதாட வாய்ப்பில்லை , நேரடி தீர்ப்புதான் .  மன்னன் வந்து விசாரித்துதான் தீர்ப்பு வழங்குவான் என்பதை படித்தும் பார்த்தும் இருக்கும் அவர்களுக்கு , இங்கு நடக்கும் விஷயங்கள் பிடிபடவில்லை . அப்போதுதான் அவர்களிருவரும் முந்தைய நாளன்று ஒலித்த மன்னர் தேவை என்ற விளம்பரம் ஞாபகத்திற்கு வந்தது . சாகக்கிடந்த ஒருவனை காப்பாற்றுவது எந்தவகையில் தவறாய் இருக்கமுடியும் என்று யோசித்தான் சந்துரு . சரி தப்பித்து ஓடலாம் என்று முடிவு செய்து , அந்த திடலை சுற்றி நோக்கினான் . அந்த திடலைச் சுற்றி எப்படியும் ஒரு 30 வீரர்கள் இருப்பார்கள் . திடலின் வலப்பக்கத்தில் ஒரு சிறிய ஓடை  இருந்தது .அதைத்தாண்டி அடர்ந்த வனம் ஆக்கிரமித்திருந்தது .மறுபுறமோ காவிரி ஆறும் , மற்றொரு புறம் நகருக்குச்செல்லும் வழியும் இருந்தன . அந்த திடலிலிருந்து  தப்பிக்க வேண்டுமெனில்  , அரைகிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அந்த ஓடையைக்கடந்துதான் தப்பிக்கமுடியும் . அங்கு ஓடுவதற்குள் வில்லேந்திய இரண்டு வீரர்களின் அம்புமழையால் உடல் பொத்தலாவது உறுதியாகிவிடும் . மொத்தத்தில் தங்களிருவருக்கும் மிகுந்த வலியுடன் கூடிய மரணம் உறுதி என்று எண்ணும் வேளையில் , அந்த வனத்தில் இருந்து ஒருவித சத்தம் வெளிப்பட்டது . வீரர்கள் அனைவரும் சத்தம் வரும் திசையைநோக்கியவண்ணம் இருக்க , அந்த காலடி சத்தம் அருகில் வருவது தெரிந்தது .

-    தொடரும்


பயணம் @ டைம்மெஷின்
அத்தியாயம் – 4
பகுதி -3
உயிரும் உணர்வும்
 ©
Megneash K Thirumurugan @ Myfreecopyrights.com




Comments

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை